Saturday 17 March 2012

நேற்று.இன்று.நாளை.


நாளை என்பது ஓர் இரகசியப் புதையல். நீங்கள் தினமும் இரவு 10.30 மணிக்கு விரும்பிப் பார்க்கும் மர்மத் தொடர். அதன் 'நாளைய' பகுதியை நீங்கள் அறிந்து கொண்டு விட்டால், உங்களுக்குள் உயிர்பெற்றிருக்கும் சுவாரசியமும் உற்சாகமும் கழுத்தறுப்பட்டு மாய்ந்து விடுகின்றன. மனிதனின் நாளையும்.. மர்மத் தொடரைப் போல - பலப்பல திருப்பங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. நாளையின் மர்மம்  மட்டுமே வாழ்க்கை வாகனத்திற்கு டீஸல் ஆகிப் போகின்றது. என்றைக்கு இந்த 'மர்ம' ஆகாரம் தீர்ந்து போகிறதோ, அன்றைக்கு மனித மிருகம் மாய்ந்து விடுகிறது. காரணம்: வாழ வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் அங்கு மறைந்துப் போகிறது.

இந்த உண்மை தான் பலர் தனக்குள் ஒளித்து வைத்து வெளியே தேடும் வாழ்க்கை இரகசியம். 'நாளை' என்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள 'இன்று' தரும் பரிசுகளையும் சந்தோஷங்களையும் நுழைவுக் கட்டணமாய்க் கொடுத்துவிட்ட மூடர்கள் நம்மில் பலர். நாளை: உன்னை ஆச்சரியப்படுத்தலாம், சோகத்தில் ஆழ்த்தலாம், நீ ஆஸ்கார் வாங்கலாம், லாரியில் அடிப்பட்டுச் சாகலாம். இது அனாவசியமானது. 'நாளை'யை பற்றிச் சிந்திக்கும் பலர், இன்றைய பொழுதை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பதே ஒளிந்திருக்கும் உண்மை. 

நான் போதிப்பது குறிக்கோளற்ற வாழ்க்கையையோ தொலைநோக்கில்லா பார்வையையோ அல்ல. நாளைக்கான எதிர்ப்பார்ப்புகளும், அந்த எதிர்பார்ப்புகளுக்குரிய செயல்களுக்கான விதைகளும் உயிர் பெற 'இன்று' தான் சிறந்த சமயம். நாளை என்பது இன்றைய செயல்களின் விளைவு. இன்றைக்கு இடும் விதை தான் நாளை வேர்விட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்கின்றது. இன்றைய பொழுதை 'முழுதாய்'  வாழ்பவனுக்கே நாளைய விடியல் நல்லதொரு விடியலாக அமைகிறது. முழுதாய் வாழ்வதென்பது இன்பங்களில் திளைப்பதும், தோல்விகளை வெற்றிப்படிகளாய் காண்பதும் அல்ல; தோல்விகளை தோல்விகளாகவே ஏற்றுக் கொள்வது தான் வாழ்க்கை தத்துவம். தோல்விகளையும் துன்பங்களையும் 'முழுதாய்' ஏற்றுக் கொள்பவன் மட்டுமே இன்பங்கள் நிறைந்த வெற்றிப்பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமாகிறான்.

காலைல காப்பி குடிக்கும் போது: "இத குடிச்சா கேன்சர் வருமாமே.." னு நினைச்சிட்டு குடிக்கறதுக்கு, அத குடிக்காமலேயே இருக்கலாம். அதே மாதிரி தான் வாழ்க்கையும்: "இன்னிக்கு ரொம்ப சிரிச்சிட்டேன். ஒரு வேளை, நாளைக்கு அழுவேனோ?" னு நினைச்சிட்டு சிரிக்கிறதுக்கு, சிரிக்காமலேயே இருக்கலாம். "என்னிக்கு ஆக்ஸிடென்ட் ஆகப்போகுதோ!"னு புது வண்டி வாங்கறப்ப நினைக்கிறதும், "என்னிக்கு டைவெர்ஸ் ஆகப்போகுதோ!" னு கல்யாணம் பண்ணறப்ப நினைக்கிறதும், "நாளைக்கு என்ன பிரச்சனைல விடியப்போகுதோ!" னு பயப்படறதும்.. எல்லாம் ஒன்னு தான். "இதுவும் கடந்து போகும்.." னு கஷ்டத்தில இருக்கிறவனுக்கு ஆறுதல் சொல்றது போய்.. இப்போ சந்தோஷமா இருந்தா கூட "இதுவும் கடந்து போகும்..!" னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன கொடுமை சார் இது! 

மனசு விட்டு சிரிங்க..
வாழ்க்கைல ஒருமுறையாவது காதலிங்க..
அம்மா மடியில தூங்குங்க..
மூக்குல ட்டற மாதிரி ஐஸ் கிரீம் சாப்பிடுங்க..
மொக்க ஜோக் அடிங்க..
ரெண்டு முறை பொய் சொல்லுங்க.. நாலு முறை மாட்டுங்க..
ராத்திரி 11 மணிக்கு மொட்டை மாடில நின்னு நிலாவ ரசிங்க..
இன்னிக்கு தான் உங்க வாழ்கையின் கடைசி தினம் னு நினைச்சு..
ஒவ்வொரு நாளும் 'வாழுங்க'!

இந்த நொடிய
"லவ் பண்ணுங்க சார்.. வாழ்க்கை நல்லா இருக்கும்."