Saturday 17 March 2012

நேற்று.இன்று.நாளை.


நாளை என்பது ஓர் இரகசியப் புதையல். நீங்கள் தினமும் இரவு 10.30 மணிக்கு விரும்பிப் பார்க்கும் மர்மத் தொடர். அதன் 'நாளைய' பகுதியை நீங்கள் அறிந்து கொண்டு விட்டால், உங்களுக்குள் உயிர்பெற்றிருக்கும் சுவாரசியமும் உற்சாகமும் கழுத்தறுப்பட்டு மாய்ந்து விடுகின்றன. மனிதனின் நாளையும்.. மர்மத் தொடரைப் போல - பலப்பல திருப்பங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. நாளையின் மர்மம்  மட்டுமே வாழ்க்கை வாகனத்திற்கு டீஸல் ஆகிப் போகின்றது. என்றைக்கு இந்த 'மர்ம' ஆகாரம் தீர்ந்து போகிறதோ, அன்றைக்கு மனித மிருகம் மாய்ந்து விடுகிறது. காரணம்: வாழ வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் அங்கு மறைந்துப் போகிறது.

இந்த உண்மை தான் பலர் தனக்குள் ஒளித்து வைத்து வெளியே தேடும் வாழ்க்கை இரகசியம். 'நாளை' என்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள 'இன்று' தரும் பரிசுகளையும் சந்தோஷங்களையும் நுழைவுக் கட்டணமாய்க் கொடுத்துவிட்ட மூடர்கள் நம்மில் பலர். நாளை: உன்னை ஆச்சரியப்படுத்தலாம், சோகத்தில் ஆழ்த்தலாம், நீ ஆஸ்கார் வாங்கலாம், லாரியில் அடிப்பட்டுச் சாகலாம். இது அனாவசியமானது. 'நாளை'யை பற்றிச் சிந்திக்கும் பலர், இன்றைய பொழுதை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பதே ஒளிந்திருக்கும் உண்மை. 

நான் போதிப்பது குறிக்கோளற்ற வாழ்க்கையையோ தொலைநோக்கில்லா பார்வையையோ அல்ல. நாளைக்கான எதிர்ப்பார்ப்புகளும், அந்த எதிர்பார்ப்புகளுக்குரிய செயல்களுக்கான விதைகளும் உயிர் பெற 'இன்று' தான் சிறந்த சமயம். நாளை என்பது இன்றைய செயல்களின் விளைவு. இன்றைக்கு இடும் விதை தான் நாளை வேர்விட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்கின்றது. இன்றைய பொழுதை 'முழுதாய்'  வாழ்பவனுக்கே நாளைய விடியல் நல்லதொரு விடியலாக அமைகிறது. முழுதாய் வாழ்வதென்பது இன்பங்களில் திளைப்பதும், தோல்விகளை வெற்றிப்படிகளாய் காண்பதும் அல்ல; தோல்விகளை தோல்விகளாகவே ஏற்றுக் கொள்வது தான் வாழ்க்கை தத்துவம். தோல்விகளையும் துன்பங்களையும் 'முழுதாய்' ஏற்றுக் கொள்பவன் மட்டுமே இன்பங்கள் நிறைந்த வெற்றிப்பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமாகிறான்.

காலைல காப்பி குடிக்கும் போது: "இத குடிச்சா கேன்சர் வருமாமே.." னு நினைச்சிட்டு குடிக்கறதுக்கு, அத குடிக்காமலேயே இருக்கலாம். அதே மாதிரி தான் வாழ்க்கையும்: "இன்னிக்கு ரொம்ப சிரிச்சிட்டேன். ஒரு வேளை, நாளைக்கு அழுவேனோ?" னு நினைச்சிட்டு சிரிக்கிறதுக்கு, சிரிக்காமலேயே இருக்கலாம். "என்னிக்கு ஆக்ஸிடென்ட் ஆகப்போகுதோ!"னு புது வண்டி வாங்கறப்ப நினைக்கிறதும், "என்னிக்கு டைவெர்ஸ் ஆகப்போகுதோ!" னு கல்யாணம் பண்ணறப்ப நினைக்கிறதும், "நாளைக்கு என்ன பிரச்சனைல விடியப்போகுதோ!" னு பயப்படறதும்.. எல்லாம் ஒன்னு தான். "இதுவும் கடந்து போகும்.." னு கஷ்டத்தில இருக்கிறவனுக்கு ஆறுதல் சொல்றது போய்.. இப்போ சந்தோஷமா இருந்தா கூட "இதுவும் கடந்து போகும்..!" னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன கொடுமை சார் இது! 

மனசு விட்டு சிரிங்க..
வாழ்க்கைல ஒருமுறையாவது காதலிங்க..
அம்மா மடியில தூங்குங்க..
மூக்குல ட்டற மாதிரி ஐஸ் கிரீம் சாப்பிடுங்க..
மொக்க ஜோக் அடிங்க..
ரெண்டு முறை பொய் சொல்லுங்க.. நாலு முறை மாட்டுங்க..
ராத்திரி 11 மணிக்கு மொட்டை மாடில நின்னு நிலாவ ரசிங்க..
இன்னிக்கு தான் உங்க வாழ்கையின் கடைசி தினம் னு நினைச்சு..
ஒவ்வொரு நாளும் 'வாழுங்க'!

இந்த நொடிய
"லவ் பண்ணுங்க சார்.. வாழ்க்கை நல்லா இருக்கும்."

Monday 30 January 2012

என்னுள்ளே என்னுள்ளே...

Something that I had written for the Global Walk for India's Missing Girls '11. It's been a year since we got together for Voice Of India's Missing Girls (VOIMG). Don't forget to listen to the VOIMG Anthem, if you haven't as yet! 
அம்மா என்றழைத்ததும் பெண்ணை... 
என்னவள் என்றணைத்ததும் மங்கை!

"
கண்ணே" என தான் பெற்ற பெண்ணை
ஏனோ விளிக்க மறக்கிறான்..
ஏற்க... மறுக்கிறான்

போதும் பொன்னமாக்களுக்கு பூமியில் இடம் இல்லை!
போராட நமக்கு, நெஞ்சில் திடம் இல்லை!
பெண்ணுரிமையா?
சொல்லடி சிவசக்தி...
பூமிதனில் பிறந்தால் தானடி உரிமை...!

கண் காணா கண்ணீரை
கருவறையில் சுமந்திருந்தாள்...
"
என் கண்ணே நீ உறங்கு"
என கள்ளிப்பால் கொடுத்திருந்தாள்...
அவள் கண்ணில்...
உதிரம் வழியுதடி தோழி!
இதயம் இடியை ஏற்குதடி!

வலி அல்ல.. வேதனை
ஆக்ரோஷம் இல்லை.. ஆதங்கம்
"
பெண் பெற்று விட்டாயா..
 
வாழ்விழந்து நின்றாயா..."
என்றவர் வாய் அடைக்க
விதி செய்யும் போராட்டம்
 -
இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
 
இது வீராங்கனைகளின் ரத்த சரித்திரம்!
              
உலக அமைதி ஊர்வலம்  - இந்தியாவின் "பேசப்படாத பெண்சிசுக்களுக்காக"!

தமிழ் பெண்ணே!                             
விழித்தெழு!
வரும் சங்கதி எம்மை மறக்காவிருக்க,
இனி ஒரு விதி செய்வோம்!
நம்மள் தோள் கொடுப்போம்! 
 

Wednesday 25 January 2012

இந்தியன் டா!

நாளை.. பாரதக் குடியரசிற்கு வயது அறுபது மூன்று. படங்களில் மட்டுமே வாழும் தேசத் தலைவர்களுக்கும், புத்தகத்தில் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கும் மரபுகளுக்கும் நினைவு அஞ்சலி. மகாத்மாவாக, கர்ம வீரராக வாழ்ந்திட, இளைய தலைக்கு அழைப்பு விடுக்கும்  இன்னும் ஒரு நாள். சிரிப்புகளுக்கும் சிறப்புகளுக்கும் இடையில் உள்ள சிதிலங்களையும் நினைவூட்ட ஊடங்கங்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு. 

விழாவில் தந்த மிட்டாய்.. நாவில் இனிக்கையில்.. நெஞ்சமும் கொஞ்சம் நெகிழும், கண்களையும் கொஞ்சம் நனைக்கும். பணப்பேய்களின் பந்தய பூமியாகவே மாறிவிட்ட தாய்திரு நாட்டை இந்தியனிடமிருந்து இந்தியனே மீட்டெடுக்கப் போராடும் அவல நிலை கண்டு அடி வயிற்றில் அக்கினிக் குஞ்சுகள் பறக்கத்தான் செய்யும். தெருவோரம் ஒருவன் எச்சில் உமிழும் போதும், தேசியக் கொடியைத் தலை கீழாய் சட்டையில் அணிந்திருக்கும் போதும்.. ஆம், அடி வயற்றில் அணையாத நெருப்பு எரிந்து கொண்டுத்தான் இருக்கிறது. நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் உலகிற்களித்த நாடாம்.. பாரதத் திருநாடு. மனிதனுக்குக் கைரேகை எப்படியோ அப்படித் தான் மரபுகளாம் ஓர் நாட்டிற்கு. பெருகி வரும் உலகச் சந்தையில் தன் அடையாளத்தையும் அங்கீகாரத்தையுமே விற்று விட்ட ஏழை தான்.. இன்றைய இந்தியன். ஆளும் வர்கங்களாகும் ஈன முயற்சியில் வெள்ளையனாகவே மாறிவிட்ட குடிமக்களின் ஆழ்மன அடிவாரங்களில் இந்தியனைத் தேடித் பார்க்கையில்.. இந்திய ஜனத்தொகை ஆயிரங்களில் நொண்டும்.

புலியையும் பூனையையும் காப்பாற்றும் போராட்டத்தில் மனித குலமே மறக்க பட்டது தான் உண்மை. பெண் சிசுக்கொலைகளும் பாலியல் வன்முறைகளும் பெண்ணினத்தையும் பெண்ணியத்தையும் மட்டும் அல்ல.. நாட்டையே தாக்கும் விஷ வைரஸ்களாய் நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கும் கலந்து விட்டன. வாழ்க்கை போராட்டம் பலருக்கு. பெண்களுக்கு.. பிறப்பே போராட்டம்! இரவும் பகலும், வெற்றிலையும் பாக்கும் என்ற வரிசையில் இந்தியாவும் ஊழலும் என்பது புதிய சேர்க்கை. 

வெற்றிக்கான ரகசியம் தேடி மேற்கு உலகத்தை உற்று நோக்கும் போலிகள் நாம். ஆம், ஆதவனை மறந்து அகல்விளக்குகள் நாடும் மூடர்கள் நாம். நீ இந்தியன். பெருமை படு; கர்வம் கொள். உன்னை பிறர் அண்ணார்ந்து பார்க்க, முதலில் நீ உன்னை நேசித்தல் வேண்டும். எம் நாடு - எம் மக்கள் என்ற உணர்வு உதிரத்தில் வேண்டும். ஒருமுறையேனும் உன் மண்ணை காதலித்துப்பார்! வீழ்வது என்றைக்குமே குற்றமல்ல. வீழ்ந்தே கிடப்பது தான் குற்றம். விடியல் நோக்கி காத்திருப்பது பயனற்றது. நீ காண விரும்பும் விடியலாக நீயே மாறி உன் சமுதாய பூமிக்கு சூரிய வெளிச்சம் கொடுக்கப் புறப்படு! உன் உலகம் உன் கரத்தில். 

வாழ்க தமிழ்! வளர்க பாரதம்!