Wednesday 25 January 2012

இந்தியன் டா!

நாளை.. பாரதக் குடியரசிற்கு வயது அறுபது மூன்று. படங்களில் மட்டுமே வாழும் தேசத் தலைவர்களுக்கும், புத்தகத்தில் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கும் மரபுகளுக்கும் நினைவு அஞ்சலி. மகாத்மாவாக, கர்ம வீரராக வாழ்ந்திட, இளைய தலைக்கு அழைப்பு விடுக்கும்  இன்னும் ஒரு நாள். சிரிப்புகளுக்கும் சிறப்புகளுக்கும் இடையில் உள்ள சிதிலங்களையும் நினைவூட்ட ஊடங்கங்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு. 

விழாவில் தந்த மிட்டாய்.. நாவில் இனிக்கையில்.. நெஞ்சமும் கொஞ்சம் நெகிழும், கண்களையும் கொஞ்சம் நனைக்கும். பணப்பேய்களின் பந்தய பூமியாகவே மாறிவிட்ட தாய்திரு நாட்டை இந்தியனிடமிருந்து இந்தியனே மீட்டெடுக்கப் போராடும் அவல நிலை கண்டு அடி வயிற்றில் அக்கினிக் குஞ்சுகள் பறக்கத்தான் செய்யும். தெருவோரம் ஒருவன் எச்சில் உமிழும் போதும், தேசியக் கொடியைத் தலை கீழாய் சட்டையில் அணிந்திருக்கும் போதும்.. ஆம், அடி வயற்றில் அணையாத நெருப்பு எரிந்து கொண்டுத்தான் இருக்கிறது. நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் உலகிற்களித்த நாடாம்.. பாரதத் திருநாடு. மனிதனுக்குக் கைரேகை எப்படியோ அப்படித் தான் மரபுகளாம் ஓர் நாட்டிற்கு. பெருகி வரும் உலகச் சந்தையில் தன் அடையாளத்தையும் அங்கீகாரத்தையுமே விற்று விட்ட ஏழை தான்.. இன்றைய இந்தியன். ஆளும் வர்கங்களாகும் ஈன முயற்சியில் வெள்ளையனாகவே மாறிவிட்ட குடிமக்களின் ஆழ்மன அடிவாரங்களில் இந்தியனைத் தேடித் பார்க்கையில்.. இந்திய ஜனத்தொகை ஆயிரங்களில் நொண்டும்.

புலியையும் பூனையையும் காப்பாற்றும் போராட்டத்தில் மனித குலமே மறக்க பட்டது தான் உண்மை. பெண் சிசுக்கொலைகளும் பாலியல் வன்முறைகளும் பெண்ணினத்தையும் பெண்ணியத்தையும் மட்டும் அல்ல.. நாட்டையே தாக்கும் விஷ வைரஸ்களாய் நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கும் கலந்து விட்டன. வாழ்க்கை போராட்டம் பலருக்கு. பெண்களுக்கு.. பிறப்பே போராட்டம்! இரவும் பகலும், வெற்றிலையும் பாக்கும் என்ற வரிசையில் இந்தியாவும் ஊழலும் என்பது புதிய சேர்க்கை. 

வெற்றிக்கான ரகசியம் தேடி மேற்கு உலகத்தை உற்று நோக்கும் போலிகள் நாம். ஆம், ஆதவனை மறந்து அகல்விளக்குகள் நாடும் மூடர்கள் நாம். நீ இந்தியன். பெருமை படு; கர்வம் கொள். உன்னை பிறர் அண்ணார்ந்து பார்க்க, முதலில் நீ உன்னை நேசித்தல் வேண்டும். எம் நாடு - எம் மக்கள் என்ற உணர்வு உதிரத்தில் வேண்டும். ஒருமுறையேனும் உன் மண்ணை காதலித்துப்பார்! வீழ்வது என்றைக்குமே குற்றமல்ல. வீழ்ந்தே கிடப்பது தான் குற்றம். விடியல் நோக்கி காத்திருப்பது பயனற்றது. நீ காண விரும்பும் விடியலாக நீயே மாறி உன் சமுதாய பூமிக்கு சூரிய வெளிச்சம் கொடுக்கப் புறப்படு! உன் உலகம் உன் கரத்தில். 

வாழ்க தமிழ்! வளர்க பாரதம்! 

1 comment: